அற்புதத்தால் குளிப்பாட்டிப் புனிதமாக்கு

blog image

இல்லாமை என்கின்ற இருளில் மூழ்கி  

   இருப்பறியா தென்வாழ்வு உழலப் பார்த்து

எல்லோரும் சிரிப்பார்கள் நீயும் என்றால்

   இரக்கமிலா உன் மனதை என்ன சொல்ல  

வல்லோனாய் ஆக்கியெனை வாழ்வித்தேற்றி

   வரம்பலதும் தந்துயர்த்தி அருகில் நிற்கப்

பொல்லாப்பு உனக்கென்ன வந்திட்டாமோ?

   போதாயே உன்கொடுமைக் களவேயில்லை?

 

தமிழுக்காய் வாழ்வதுதான் பாதை என்று

  தனிவழியே என் வாழ்வை ஆக்கி நானும்

அமிழ்தொத்த கவி புனைய அருகில் வந்து

  அருஞ் சொற்கள் ஈந்தளித்து எனக்கு நீதான்

உமிழ் நீராய் என் ஊற்றுப் பேனா சேர்ந்தால்

   உலகத்தோர் என் கவியை மதிப்பர்தானே

குமிழ்நீர்போல் குறுகியதாம் எந்தன் வாழ்வின்

  குறைகளைய நீ அல்லால் எனக்கு யாரோ?

 

பொருள்தேடல் ஒன்றே என் எண்ணமானால்

 போயிருப்பேன் வேறுதிசை என்றோ நான்தான்

அருள் கொண்ட நீயருகில் இருப்பாய் என்று

 அப்பாவியாய்ப் பொருளைத் தேடல் விட்டு

தருபுகழ்சேர் தமிழ்க் காதல் நெஞ்சில் தாங்கி

 தன்வழியே நான் நடந்தேன் நீண்ட தூரம்

வருபிறவி ஒருநூறு வந்தால் கூட  

 வண்டமிழே என் பாதை இதுவே உண்மை

 

  விடையறியாக் கேள்விகளென் வாழ்வைச் சூழ்ந்து

      விந்தையுற எனைக் குழப்பி மயக்கினாலும்

  தடையென நான் துவண்டறியேன் தமிழை விட்டுத்

      தள்ளி நில்லேன் தாயே உன் அருளால் ஓங்கி

  மடைதிறந்த வெள்ளம் போல் கவிதை பாடி  

      மங்காத புகழ் கொள்வேன் மண்ணில் என்றும்

  நடையிலுயர் வெய்தி நின்று நன்மை செய்து  

      நாளெல்லாம் தமிழ் மணக்கும் வாழ்வைத் தா நீ

  

கனமறியாக் காகிதமாய் காற்றில் நானும்

  காலமெலாம் எத்துண்டு திரிவனானால்

எனையறிந்தோர் எல்லோரும் இகழ்வார் தாயே

  ஏனென்றும் கேட்காமல் நீதான் நின்றால்

முனைமுறிந்த ஈட்டியைப் போல் முழுதும் வீணாய்

 மூண்டெழுந்த இப்பிறவி தொலைந்து போகும்

உனைப்பாகம் கொண்டவனும் நீயும் சேர்ந்து

  உருப்படியாய் என்வாழ்வை உயர்த்த வாரீர்!

 

உயிர் உற்று உரம் பெற்று உச்சம் தொட்டு

  உலகெல்லாம் என் கவிதை ஆள நீதான்

அயில் ஒத்த அருட்கண்ணால் வரத்தை ஈந்து

  அற்புதத்தால் குளிப்பாட்டிப் புனிதமாக்கு

வெயிற்கால வெஞ்சுரத்தில் நிழலை ஊட்டும்

  வெண்நிலவே  உன் குளிரால் வெம்மை நீக்கு

பயிர்வாடப் பார்த்தறியா இயல்பு கொண்ட  

  பராசக்தி உன்னருளால் (என்) கவியும் வாழும்

 

Share :
Tag :
Comments