சித்திரா பௌர்ணமி

blog image

 உ

 

சைவர்களது வாழ்வியலில்,

மிக மிக இன்றியமையாது பேணப்பட்டுவருகின்ற,

விரதங்களுள் ஒன்றாக விளங்குவது சித்திரா பௌர்ணமி விரதம்.

தாயை இழந்த ஒவ்வொருவரும் தங்கள் தாயை மனதில் நினைந்து,

அவருக்குச் செய்யும் நன்றியாகவும், கடமையாகவும் இவ் விரதத்தை மேற்கொள்வர்.

ஃ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ

சித்திரை மாதத்தில் வருகின்ற

பௌர்ணமித் திதியோடு சித்திரை நடசத்திரமும் கூடிய

சிறப்பிற்குரிய நாள் இந்நாள். இந்நாளில் மேற்கொள்ளப்படும் விரதம் என்பதால்,

இவ் விரதம் சித்திரா பௌர்ணமி எனப் பெயர் பெறலாயிற்று.

ஒரு ஆண்டில் மிகவும் ஒளி கூடிய மாதமாக கருதப்படும் மாதம் சித்திரை மாதம்,

அம்மாதத்தில் மிகவும் ஒளிகூடிய நாளாக கணிக்கப்பட்டுள்ள நாள்,

சித்திரை நட்சத்திரமும் பௌர்ணமித் திதியும் கூடிய இந்நாள்.

இந்நாள் எம் பண்டைய காலத்தில் மிகவும் முக்கியமான நாளாக

கருதப்பட்டு வந்துள்ளது.

இந்நாளில் இரவு நிலவொளியில் ஊரின் நடுவே அனைவரும் கூடி,

பஞ்சாங்கம் படித்து அந்த ஆண்டுக்கான,

விஷேட நிகழ்வுகளைக் குறித்துக் கொள்வர்.

அதுபோலவே அறிய வேண்டிய அரிய வேறுபல ஏடுகளையும்

படித்துத் தெரிந்து கொள்வது இந்நாள் வழக்கம்.

ஆரோக்கியமான ஒளி நாள் என்றவகையில் இந்நாளின் நிலவொளி

தம் மேனியில் படவேண்டும் என்று இந்நிலவை எம் பண்டைய மக்கள்

அனுபவித்து வந்ததாக சொல்லப்படுகிறது.

இரவு நிலவு காலித்த பின் நெய்விளக்கேற்றி சிவனையும், சந்திரனையும்,

சித்திரபுத்திரனையும்,மலையையும்

இந்நாளில் வழிபாடு செய்வது பண்டைய வழக்கம்.

திருவெண்ணாமலையில் இவ்வழிபாடு சிறப்பாய் முன்னெடுக்கப்படுகிறது.

அஸ்டலிங்க வழிபாடும் இந்நாளில்,

சிறப்பாக முன்னெடுக்கப்பட வேண்டிய வழிபாடு ஆகும்.

பால் சேர்க்காது செய்யப்பட்ட உணவு வகைகளும்,

சித்திர அன்னங்களும் இந்நாளில்,

சிறப்பாக படைக்கப்பட வேண்டிய நைவேத்தியங்களாகும்.

புத்திரப் பேற்றை விரும்புவோர் பின்பற்றத்தக்க,

விரதமாக இவ்விரத நாள் சொல்லப்பட்ட போதும்,

இறந்த தாயை நினைந்து கடைப்பிடிக்கும் விரதம் என்பதே,

இவ்விரதத்தின் தனிச் சிறப்பாகும்.

இந் நாளில் தாயை இழந்த ஆடவர்கள் நீர் நிலைக்குச் சென்று நீராடி,

இறந்த தாயை நினைந்து தர்ப்பணம் செய்வர்.

தாயை இழந்த பெண்கள் தர்ப்பணம் செய்யாது

வீட்டில் தம் விரதத்தை அனுட்டிப்பர்.

தாயாரின் படத்திற்கு மலரிட்டு,

ஆசாரமாகச் சமைக்கப்பட்ட உணவு வகைகளைப்படைத்து, வணங்குவதும்

அன்றைய நாளில் குடும்பத்தவர்கள் உறவினர்களோடு இணைந்து,

உணவை உண்ணுவதும் பொதுவான வழக்கம்,

பொதுவாக தாயார் இறந்து ஓராண்டு முடியுமுன்

இவ் விரதத்தை அனுட்டிப்பதில்லை.

ஃ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ

ஆதிகாலத்தில் இத்தினத்தில் விரதம் இருந்து,

கோயில்களிலும் ஏனைய புனிதமான பொது இடங்களிலும்,

கஞ்சி காய்ச்சி அனைவர்க்கும் வழங்கி மகிழ்வர்.

இந்நாளில் சித்திரபுத்திரனார் கதையைப் படிப்பதுவும்,

பெருவழக்காகப் பின்பற்றப்பட்டு வந்தது.

பின்னாளில் சிவனுக்குரிய சிறப்பான நாளாகவும்

இறந்த தாயை நினைவுகூரும் பிதிர் நாளாகவும் மாறிவந்துள்ளது.

ஃ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ

குரவைக் கூத்து

சித்திரா பௌர்ணமி நன்நாளில் குரவைக்கூத்தாடும் வழக்கமும்,

முற்காலத்தில் காணப்பட்டு வந்துள்ளது.

மலைக்கூத்து, தெற்றியாடல் என்ற பெயர்களால் வழங்கப்பட்டுவந்த,

“குரவைக் கூத்து” எனும் கூத்து, போர் தொடங்கும் சூழ்நிலையிலும்,

அச்சம் மிகுந்த காலங்களிலும் அவ் அச்சத்தில் இருந்து விடுபட,

கிராமத்து மக்களால் ஆடப்பட்டு வந்திருக்கிறது.

சிலப்பதிகாரத்தில் மதுரையில் ஆயர்சேரியில் கண்ணகி துணுக்குற்றிருந்தவேளை,

அவளைத் தேற்றி மகிழ்விக்க ஆயர்குலப் பெண்கள் குரவைக்கூத்தாடினர்,

என்ற குறிப்பு இடம்பெற்றிருப்பது கவனிக்கத்தக்கது.

வசந்தவிழா

வசந்தவிழாக் கொண்டாட்டமும் சித்திரா பௌர்ணமி தினத்தோடு தொடர்பு

பட்டது.

வசந்தகாலத்தின் வரவை கொண்டாடும் முகமாக

பண்டைக்கால மக்களால் கொண்டாடப்பட்டு வந்த “வசந்தோற்சவம்” என்ற விழா,

தமிழர்களின் வாழ்வில் சிறப்பான நாளாகக் கருதப்பட்டு வந்த

சித்திராபௌர்ணமி நாளோடு தொடர்புபட்டு கொண்டாடப்பட்டிருக்கிறது.

சித்திரபுத்திரன் கதை

சித்திரா பௌர்ணமி தினத்தில் சித்திரபுத்திரன் கதையைப் படித்து வரும் வழக்கம்,

தொன்று தொட்டு இன்று வரை நடைமுறையில் உள்ளது.

சித்திரை மாதத்து சித்திரை நட்சத்திரத்தில்,

சித்திரபுத்திரன் தோன்றிய காரணத்தால் இவரது வரலாற்றுக் கதையைக்

கதையாகப் படிப்பது வழக்கமாக உள்ளது.

ஆதிகாலத்தில் சிவபிரானால் பலகையொன்றில் சித்திரமாக வரையப்பட்ட

அழகிய புத்திரன் உமையவளின் விருப்பிற்கிணங்க,

சிவபெருமானின் மூச்சுக்காற்று ஊட்டப்பெற்று

உயிர்பெற்றெழுகிறான்.

சிவனைப் போலவே அழகுறக்காட்சி தந்த

அவனது கரங்களில் ஏடும் எழுத்தாணியும் விளங்குகின்றன.

உலகெங்கிலும் உள்ள ஜீவராசிகளின் பாவக்கணக்குகளைச்

சரிபார்த்து அவரவரைத்தண்டிக்கும் பாரிய பொறுப்பிற்குத் துணை வேண்டும்

எனக்கேட்ட யமதர்மராஜனுக்கு உதவியாளாக உடன் இருந்து உதவுமாறு

சிவபிரான் பணிக்க அப்பணி ஏற்று யமதர்மராஜனுக்கு,

உதவிவருகிறார் இச்சித்திரபுத்திரனார்.

பேராற்றல் கொண்ட ஆயிரம் பேர் ஒன்றிணைந்து அசைத்தாலும்,

அசைக்க முடியாத ஏட்டைத் தன் கையில் வைத்திருக்கிறார்.

அதலம், சுதலம், பாதாலம் முதலிய அண்டசராசரங்களிலும்,

வாழுகிற அத்தனை உயிர்களதும் பாவக்கணக்குகளை,

அவ் உயிர்களின் தோளில் அமர்ந்தபடி அவதானித்து,

அதற்குத்தக அவர்களுக்கான ஜென்மங்களை வகுத்து வருபவர்தான்

இந்தச் சித்திரபுத்திரனார். இவரை சித்திரகுப்தன் என்றும் அழைப்பது வழக்கம்.

தாயோடறுசுவை போம்

பெற்றதாயின் பெருமை உணர்ந்த பிள்ளைகள் தாயின் பிரிவின் பின்

இவ்வுலகில் அவர்களுக்குண்டான வெற்றிடத்தை உணர்வர்.

எல்லாவிதமான பற்றுக்களையும் எளிதில் துறந்த பட்டினத்தடிகள்

தாயன்பைத் துறக்கவொண்ணாது தவித்தார்.

தாயைப் பிரிந்த பின் அறுசுவை உணவை உண்டவர் இலர்.

அதனால்தான் தாயோடறுசுவை போம், என்ற தொடர் வழங்கிவரலாயிற்று

உலகத்தின் ஆதார சுருதியாக விளங்குகிற தாயின் பெருமையை,

தரணிக்குணர்த்துகின்ற பெரு நாளாக விளங்கும் இந்நாள்,

உலகத்து உயிர்களின் நன்றியை வெளிக்காட்டும் பொன்னாள்.

இந்நாளில் தாய்க்குலத்தை வழிபட்டு உய்வுபெறுவோம்.

நன்றி

வணக்கம்

“சாதனை செய்க பராசக்தி”

Share :
Tag :
Comments